பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடந்தது.
இலங்கை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்க ஜெர்மனி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெர்லினில் மாபெரும் பேரணியை தமிழர்கள் நடத்தினர்.
வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள ஜெர்மனி ஆளும் கட்சி செயலகத்தின் புதன்கிழமை காலை 9 மணி முதல் தமிழ் மக்கள் கூடத் தொடங்கினர்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை விளக்கும் படங்கள், பதாதைகள் மற்றும் சிவப்பு-மஞ்சள் கொடிகளை தாங்கியவாறும்,இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்தக்கோரும் பதாதைகளை தாங்கியவாறும் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடிய தமிழ்மக்கள் பிற்பகல் 1 மணியளவில் ஜெர்மனி நாடளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
முதலில் நார்வே மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான மனுக்களை நார்வே தூதரகத்தில் அளித்து விட்டு பேரணியாக இந்திய தூதரகம் நோக்கி நகர்ந்து சென்றனர்.
இந்திய தூதரகம் முன்பாக சிறிது நேரம் நின்ற மக்கள் இந்திய தூதுவரிடமும் மனுவொன்றை அளித்தனர்.
நகரின் மத்தியில் அமைந்த பிரதான வீதி ஊடாக நகர்ந்த பேரணி, ஜெர்மனி நாடாளுமன்றத்திற்கு அருகில் இருந்த மைதானத்தை சென்றடைந்தது.
மக்கள் பேரணியாக முழக்கங்களை எழுப்பிய வண்ணம் நிற்க, ஜெர்மனி அரச தலைவருக்கான மனு அவரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதனை அடுத்து சிறப்புரைகள் இடம்பெற்றன.
இதில், ஜெர்மனியின் பல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கும் அதிகமான பேருந்துகளில் வந்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.