
தமிழினப்படுகொலை குறித்து இந்திய அரசும், தமிழக அரசும் வெளிக்காட்டிய எதிர் வினை என்ன என்று குமுதம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக குமுதம் வெளியிட்டுள்ள தலையங்கம்..
இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது - இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா.
வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள் என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்.
பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் கொத்தாக நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிரான குரலை உயர்த்தியிருக்கின்றன. இலங்கையில் நடந்த கொடூரங்களைத் தாங்க முடியாத சிங்களப் பத்திரிகையாளர்கள் கூடக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஒன்றரை லட்சம் தமிழ்மக்கள் சொந்த நாட்டில் மிகக் கேவலமான முறையில் வீடற்றவர்களாக முகாம்கள் என்கிற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைபடுகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழக் கனவு கண்டதற்காக அவர்களுடைய பார்வையை மட்டுமல்ல, உயிரையே பறித்திருக்கிறார்கள். தமிழ் இனம் கண்ட அவலங்களின் உச்சம் - சமீபத்திய இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகள்.
பன்னாட்டு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிரான விசாரணையை இன்னும் யாராலும் துவக்க முடியவில்லை. உலகெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள், அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்கள் மத்தியில் வெறுமையுடன் குடையும் கேள்வி - இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்தை யார் நிர்ணயிப்பது?
இந்திய அரசின், தமிழக அரசின் எதிர்வினைதான் என்ன?
"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே" என்ற வரிகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
என்ன செய்ய முடியும் ஊமை சனங்களால்? என குமுதம் கூறியுள்ளது