தமிழ் சினிமாவை கோலிவுட் என அழைக்காதீர்கள் - கமல்ஹாசன்
தயவு செய்து தமிழ் திரையுலகை இனி கோலிவுட் என அழைக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கலைஞர் டி.வி. குழுமத்தின் புதிய சேனலான சிரிப்பொலியை நடிகர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். இதே குழுமத்தின் இசையருவி சேனலின் முதலாண்டு விழாவும், சிரிப்பொலி என்ற புதிய சேனலின் தொடக்க விழாவும் நேற்று இரவு சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது.
இதில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு சிரிப்பொலி சேனலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
'ஸ்ருதிக்கும் எனக்கும் பிரச்சினையில்லை!'
எனக்கு கிடைத்த இசை வாத்தியார்கள் ரொம்பவும் நல்லவர்கள். திறமையானவர்கள். நான் ஆரம்பத்தில் பாடும்போது சுருதி சரியாக வரவில்லை என்றார்கள். அதன்பிறகு 'ஸ்ருதி' (கமலஹாசனின் மகள்) தவழ்ந்து, வளர்ந்து, பெரியவளாகி விட்டாள். அதனால் இப்போது ஸ்ருதிக்கும் எனக்கும் பிரச்சினையும் இல்லை.
ஆரம்பத்தில், நான் மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரங்களில் இளையராஜா ஒரே நேரத்தில் என்னை 2 பாடல்களை பாட அழைத்தார். அந்த பாடல்களில் என்னையும் அறியாமல் மலையாளம் கலந்திருந்தது. (பன்னீர் புஷ்பங்களே... என்ற பாடலை பாடிக் காட்டினார்). அப்புறம்தான் மாறியது.
இங்கு எல்லோரும் தமிழ் சினிமா உலகை கோலிவுட் என்றும் இந்தி படஉலகை பாலிவுட் என்றும் அழைக்கிறார்கள். தயவு செய்து தமிழ் பட உலகை கோலிவுட் என்று அழைக்காதீர்கள்.
தமிழ் திரையுலகம் என்றோ அல்லது சென்னை பிலிம் இண்டஸ்டிரி என்றோ அழையுங்கள். கோலிவுட் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.
எனது சின்ன வயதில் நான் தவறு செய்து விட்டால் அப்பா, என்னை "காலிப் பயலே, காலிப் பயலே' என்றுதான் திட்டுவார். அதனால் கோலிவுட் என்பது என் காதுகளில் காலிப்பயலே என்று சொல்வது போலத்தான் கேட்கிறது.
நகைச்சுவை சேனல் நிகழ்ச்சி என்பதால் இதை நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது சீரியசாகவும் எடுத்துக் கொள்ளலாம், என்றார் கமல்.
விழாவில் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், பட அதிபர்கள் அபிராமி ராமநாதன், ஆர்.பி.சவுத்ரி, நடிகர்கள் நெப்போலியன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, மனோபாலா, பாடகர்கள் உன்னிமேனன், கிரிஷ், இசையமைப்பாளர் சிற்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலைஞர் டி.வி.குழுமத்தின் பொது மேலாளர் பெரைரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நடிகர் விஜய் ஆதிராஜ் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Labels:
fun news