Latest Movie :

1 லட்சம் தமிழர்களை கொல்ல இலங்கை ராணுவம் சதி: ராமதாஸ்


ஈழத்தில் போர் முனையில் சிக்கி தவிக்கும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கை ராணுவம் புதிய சதித் திட்டத்தை தீட்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலால், போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் அவல நிலைமை குறித்த விவரங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன.

மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில் இலங்கைப் படைகள் குண்டுவீசி அப்பாவி தமிழர்களை அழித்து வருகின்றன என்பதை நியூயார்க்கில் உள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம் என்ற அமைப்பு உறுதி செய்துள்ளது.

இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில்கூட இலங்கைப் படைகள் தொடர்ந்து, வெறித் தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றன.

முல்லைத் தீவு மாவட்டத்தில் 100 சதுர கிமீ பரப்புள்ள பகுதிக்குள் விடுதலைப்புலிகள் இயக்கம் பின்வாங்கியதில் இருந்தே, இலங்கைப் படையினரால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2 வாரங்களில், மட்டும் இரண்டு ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7 ஆயிரம் அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

போர் நடக்கும் பகுதியில் இருந்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறிவிட்டார்கள் என்று இலங்கை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எஞ்சியுள்ள அனைத்து 70 ஆயிரம் பேரும் வெளியேறிவிட்டார்கள் என்றும் கூறும். பின்னர் விடுதலைப்புலிகள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள் என்றும் கூறி தாக்குதல் நடத்த முயலும். ஆனால் அங்கு அந்த 100 சதுர கி.மீ. பகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

பீரங்கிகள், டாங்கிகள், வானூர்திப் படையின் துணையுடன், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைப் படைவீரர்களால் பெரும் தாக்குதல் நடத்தப்படலாம். அதன் விளைவாக அங்கிருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் மனிதப் பேரழிவாக அது இருக்கும். இந்த இனப்படுகொலை உடனடியாக நிகழக்கூடிய பேராபத்து உள்ளது.

இந்தப் பயங்கரங்களின் பயங்கரம் நடப்பதற்கு இந்திய அரசு இசைவளிக்கப் போகிறதா? அல்லது இந்த இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த எல்லா வழிகளையும் அது பயன்படுத்தப் போகிறதா? என்பதே இப்போதைய வினா.

காலம் கடப்பதற்கு முன்பாக இதற்கு உடனடியாக விடை தேவை என்பதே இந்திய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் எழுப்பும் குரல். இதனை உணர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஆபத்தை தடுக்க செயல்பட முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger