'ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்ற முதல் இந்தியர் ஏஆர். ரஹ்மானுக்கு தமிழக சட்டசபை பாராட்டு தெரிவித்துள்ளது. 

இந்த பாராட்டை வாசித்த சட்டமன்ற திமுக தலைவரும், நிதியமைச்சருமான அன்பழகன்,

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இந்தியர், அதுவும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் திரைப்படத் துறையில் உலகத்திலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இரண்டினை, தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக பெற்றுள்ளார். 

ஒரு தமிழன் தமிழ் திரையுலகினையே உலக அரங்கில் தலை நிமிர வைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற இரு ஆஸ்கார் விருதுகளை பெற்று தந்தமைக்கு, தமிழ்த் திரையுலகினர் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் அவர்கள் உயர்வையே தன் எண்ணமாகக் கொண்டு வாழ்ந்து வரும் முதல்வர் கலைஞர் சார்பாகவும், பேரவையின் உறுப்பினர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர் மேன்மேலும் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென்று பேரவையின் சார்பில் வாழ்த்துகிறேன் என்றார்.

இதேபோல், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய திரைத் துறையின் கனவாக இருந்த ஆஸ்கார் விருதை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளதற்கு சிறப்பு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகக் கூறி அதனை வாசித்தார்.