இலங்கையி்ல் நடந்து வரும் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் நாளை இடைக்கால ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
மே மாதத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் போரில் சிக்கி பெரும் துயரில் இருக்கும் நிலை இந்தியாவுக்குக் கவலை தருகிறது.
இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற அரசியல் தீர்வு காணப்படுவதை இந்தியா வரவேற்கிறது.
இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை விட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.
இரு தரப்பும் தங்களது தாக்குதலை ஒரே சமயத்தில் நிறுத்தி விட்டால், பேச்சுவார்த்தை சாத்தியமாகும். இலங்கை அரசு தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். அதேசமயம், விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கைவிட்டு விட்டு அரசுடன் பேச முன்வர வேண்டும்.
இலங்கைக்குள் இடம் பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலைமை கவலை தருகிறது. ராணுவ நடவடிக்கையாலும், சண்டையாலும் அவர்கள் பெரும் துயரில் மூழ்கியுள்ளனர் என்றார்.
மதிமுக அமளி
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இலங்கைப் பிரச்சினை குறித்து பேசும்போது மதிமுக உறுப்பினர்கள் பொள்ளாச்சி கிருஷ்ணனும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் எழுந்து குரல் எழுப்பியதால் அவையில் சில விநாடிகள் அமளி ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் அமைதியாக அவை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது உரையைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது,
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கம் பணிகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
மும்பையில் நடந்த தாக்குதல் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே திட்டமிட்டு நடத்தப்பட்டது. பல்வேறு முனைகளிலும் தீவிரவாதம் சவாலாக இருக்கிறது. இதற்காக தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் எடுத்துள்ளோம். உள்நாட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
பாலஸ்தீனப் பிரச்சினையைப் பொறுத்தவரை, மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதியும்,ஸ்திரத்தன்மையும் ஏற்படுவதையே இந்தியா விரும்புகிறது. பாலஸ்தீனிய மக்களின் நலனுக்கே இந்தியா எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
காஸா பகுதியில் நடந்த தாக்குதல்களில் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டது இந்தியாவை கவலை கொள்ளச் செய்தது. பாலஸ்தீனப் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
அதேபோல மத்திய ஆசியாவிலும் இந்தியா தனது நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது.
வளைகுடா நாடுகளுடன் இந்தியாவுக்கு பாரம்பரியமான, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் உள்ளன.
இதை வலுப்படுத்தும் வகையில், சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங், ஓமன் மற்றும் கத்தார் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் மூலம் சக்தி பாதுகாப்பு, முதலீடுகள், வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் நலன்கள் ஆகியவற்றில் இரு தரப்புக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க உறவு மேலும் வலுப்படும் ...
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பாரக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்துடன் மேலும் நல்லுறவை பேண இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இரு நாடுகளும் பல்வேறு முக்கிய சவால்களை சந்தித்து வருகின்றன. இவற்றை கூட்டாக எதிர்கொண்டு முறியடிக்கவும் உறுதி பூண்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது. இரு நாடுகளின் உறவையும் வலுப்படுத்த இது உதவியது.
அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், முதலீடுகள் என பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பட்டுள்ளது.
அதேபோல ரஷ்யாவுடன் இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் மதிப்பு வாய்ந்த நண்பனாக ரஷ்யா திகழ்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு, அணு சக்தி தேவைகள், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளியியல் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொய்வின்றி தொடர்ந்து வருகிறது என்றார் பிரதீபா பாட்டீல்.
மன்மோகன் சிங் குணம் பெற வாழ்த்து
பிரதீபா பாட்டீல் தனது பேச்சின் இடையே, பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் உங்கள் அனைவரின் சார்பிலும் நான் வேண்டிக் கொள்கிறேன், வாழ்த்துகிறேன்.
பிரதமர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து தனது பணியை தொடர வேண்டும் என விரும்புகிறேன்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து இரு அவைகளும் தனித் தனியாக கூடின.
இரு அவைகளிலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
லோக்சபாவில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, வெங்கட்ராமன் குறித்த இரங்கல் குறிப்பை வாசித்தார்.
சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகவும், பல உயர் பதவிகளை வகித்தவராகவும், பொது வாழ்க்கையில் உயரிய நிலையில் இருந்தவராகவும் வெங்கட்ராமன் விளங்கினார் என்று அப்போது சோம்நாத் புகழாரம் சூட்டினார்.
பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நி்ன்று இரங்கல் தெரிவித்தனர்.
அதேபோல ராஜ்யசபாவிலும் ஆர். வெங்கட்ராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.