ஐ.நா: இலங்கையின் வட பகுதியி்ல் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பெரும் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் இந்தியாவில் இருந்தபோது இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழர்கள் நிலை குறித்துப் பேசினேன். ஏராளமான அப்பாவி மக்கள் கொலையாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்தேன்.
அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக ராஜபக்சே தெரிவித்தார். சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கீழ் செயல்படுமாறும், மனித உரிமை மீறல்களை நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவரிடம் வலியுறுத்தினேன் என்றார்.
நிலைமை படுமோசம்-அகதிகளுக்கான தூதர்:
இந் நிலையில் ஐ.நா. அகதிகளுக்கான தூதர் ரான் ரெட்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் உடனே போர் நிறுத்தம் அவசியம். அங்கு அநியாயமாக அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகிக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது.
வன்னி பகுதியில் மட்டும் 2.5 லட்சம் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற, மகா மோசமான நிலையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளனர். வவுனியாவில் உள்ள முகாம்களில் 13.000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் 5000 பேர் வவுனியாவை நோக்கி நடை பயணமாக சென்று கொண்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையாவது இலங்கை அரசு தனது முகாம்களில் செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தங்களை ஐ.நாவும், பிசிசி நிறுவனமும் குறை கூறுவதற்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (SLBC) மூலமான தனது எப்.எம். ஒலிபரப்பை பிபிசி உலக சேவை (BBC World Service) ரேடியோ நிறுத்தியுள்ளது. ஒலிபரப்பில் இலங்கை வானொலி நிறுவனம் தொடர்ந்து தேவையில்லாத தலையீடுகளை செய்ததால், சேவையை பிபிசி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஐ.நா. மீது தாக்கு:
இந் நிலையில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சகத்தின் செயலாளர் ராஜிவா விஜேசிங்கே கொழும்பில் நிருபர்களிடம் பேசுகையில்,
மனித உரிமைகள் விஷயத்தில் இந்த நேரத்தில் இலங்கையை ஐ.நா. குறை கூறுவது சரியல்ல என்றார்.
பிபிசி மீது தாக்கு:
இலங்கை வானொலியின் தலைவர் ஹட்சன் சமரசிங்கே கூறுகையில், பிபிசி தனது சேவையை நிறுத்துவது குறித்து எனக்கு முறையான நோட்டீஸ் அனுப்பவி்ல்லை. நாங்கள் பணம் கொடுத்து வாங்கும் செய்திகளில் எங்கள் மனம்போல் தலையிட எங்களுக்கு முழு உரிமை உண்டு. இலங்கை வானொலி தான் நாட்டின் குரல். இதில் பிரபாகரனின் குரலை ஒலிபரப்பும் உரிமை எனக்கில்லை என்றார்.