பிரபாகரன் உடல் மீட்பு-ஏராளமான மர்மங்கள்!
முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்பு ராணுவம் கூறியதைப் போல தப்பி ஓட முயலவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஹலகலே கூறியுள்ளார்.
ஒரே நாளில் ராணுவம் இப்படி மாற்றிக் கூறியுள்ளதால், பிரபாகரன் எந்தச் சூழ்நிலையில் கொல்லப்பட்டார், யார் அவரை சுட்டுக் கொன்றது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவின்படி விடுதலைப் புலிகள் இயக்க சீருடையில் கம்பீரமாக காணப்படும் பிரபாகரனின் தலையில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
முதலில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது ராணுவம் அவரை சுட்டுக் கொன்றதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்திருந்தது.
ஆனால் நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் குண்டுக் காயம் உள்ளது. அதைக் காட்டாமல் மறைக்க துணியை வைத்து ராணுவம் மறைத்துவிட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
சயனைட் அருந்தி இறந்த பின் சுடப்பட்டாரா?:
மேலும், தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக முன்பு கூறப்பட்டதை இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஹலகலே இன்று மறுத்துள்ளார். இதனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் நெருக்கத்தில் இருந்து பிரபாகரன் சுடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
அவர் சயனடை அருந்தி தற்கொலை செய்த பின்னர் உடலை எடுத்து வந்து தலையில் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும் அவரது உடல் கிடந்த இடம் என்று ராணுவம் கூறுவது பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு எப்படி அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை.
ஒரே நாளில் நடந்த டி.என்.ஏ சோதனை!:
இறந்தது பிரபாகரன் தான் என்றும், டி.என்.ஏ. சோதனைகள் அதை உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் டி.என்.ஏ. சோதனைகள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு விடை இல்லை.
அதே போல பிரபாகரன்ஏன் புலிகள்உடையில் இருந்தார்?, தப்பியோட முயல்பவர் சாதாரண உடையில் இருந்திருக்க மாட்டாரா? என்ற கேள்விகளும், அவரது முகம் சேவ் செய்யப்பட்டுள்ளதே, கடந்த 3 நாட்களாக 500 மீட்டர் தூரத்தில் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர் சேவ் செய்து கொண்டிருப்பாரா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.
மொத்தத்தில் பிரபாகரனின் மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன.
Labels:
NEWS