Latest Movie :

போர்க் குற்றம்-ஆதாரங்களை அழிக்கிறது இலங்கை!





லண்டன்: இலங்கையில் போர்க் குற்ற ஆதாரங்களை இலங்கை அரசும், ராணுவம் அழித்து வருகின்றன. இதன் காரணமாக, செஞ்சிலுவைச் சங்கத்தினரையும், ஐ.நா குழுவினரையும் இலங்கை அரசு போர்ப் பகுதிக்கு அனுப்பாமல் தடுத்து வருகிறது என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக சட்டத் துறை பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் கூறியுள்ளார்.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சலெஸ் வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

இலங்கையில் தமிழர்கள் மெல்ல மெல்ல இன ரீதியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செரபெனிகா இனப்படுகொலையை மிஞ்சும் வகையில், இலங்கையில் இனப்படுகொலை நடந்து வருகிறது.

பாதுகாப்பு வளையப் பகுதியில் தான் செய்து வரும் இனப்படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் வேலையில் இலங்கை மும்முரமாக உள்ளது. இதன் காரணமாக செஞ்சிலுவைச் சங்கத்தினரையும், ஐ.நா. குழுவினரையும் அனுப்பாமல் தடுத்து வருகிறது இலங்கை அரசு.

அமெரிக்க அரசு வைத்திருக்கும் உளவு செயற்கைக்கோள்கள் மூலம் இந்த இனப்படுகொலை மற்றும் ஆதாரங்களை அழிக்கும் முயற்சிகளை தெளிவாக அறிய முடியும். ஆனால் அமெரிக்காவும் சரி, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் சரி இந்த இனப்படுகொலையை தடுக்காமல் பார்த்துக் கொண்டுள்ளன.

போர் பாதித்த பகுதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் செல்ல முடியாமல் உள்ளனர். அங்கு இடம் பெயர்ந்து வந்த 3 லட்சம் தமிழர்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வழங்க முடியாத நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளது.

பசி, பட்டினியில் சிக்கி இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களைப் பார்த்தால், நாசி மரண முகாம்களில் சிக்கியவர்களைப் போலவே உள்ளது.

காஸாவில் என்ன நடந்ததோ அதேதான் இப்போது இலங்கையிலும் நடந்து வருகிறது. ஆனால் காஸாவிலோ பாதாள குழாய்கள் மூலம் உணவு அனுப்பப்பட்டது. ஆனால் அது கூட தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.

சுதந்திரமடைந்தது போல இனவெறியால் பீடிக்கப்பட்டுள்ளது இலங்கை. புத்தமதத்தினர் நடத்திய இனவெறி கலவரம், இந்தியா வின் பாரபட்சமான போக்கு ஆகியவையே இந்த அளவுக்கு இலங்கைப் பிரச்சினை சிக்கலாகிப் போக முக்கிய காரணம்.

நல்லெண்ணத்துடன், நல்ல நம்பிக்கையுடன் பேசுவதற்குப் பதிலாக இலங்கை அரசுகள் தமிழ் மக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே முக்கியமாக கொண்டு அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின.

இலங்கையில் தமிழ் மக்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மனசாட்சி உள்ளவர்கள் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும், அவர்கள் மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ உதவி புரிய வேண்டும் என்றார் பாயில்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger