Latest Movie :

வன்னியில் இதுவரை 2000 தமிழர்கள் படுகொலை: இலங்கை தமிழ் எம்.பி. சம்பந்தன்

இலங்கையில் வன்னிப் பகுதியி்ல் ராணுவத் தாக்குதலில் இதுவரை 2000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த இனப்படுகொலையை சற்றும் கண்டு கொள்ளாமல் உலக நாடுகள் வேடிக்கை பார்த்து வருகின்றன என்று திரிகோணமலை மாவட்ட எம்.பி. இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் சம்பந்தன் பல்வேறு நாட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 

சிறிலங்கா படையினர் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை, பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் இதுவரை சுமார் 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 4,500-க்கும் அதிகமானனேர் காயமடைந்தும் உள்ளனர்.

ராஜபக்சே அரசு தமிழர்கள் மீதான நன்கு திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருக்கின்றது. உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இந்த அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததன் நோக்கம் என்ன?.

அந்த மக்களை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கக்கூடாதா?.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறி வருகின்ற மக்களை விடுதலை புலிகள் கொலை செய்கின்றனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

விடுதலைப் புலிகள் எதற்காக மக்களை கொலை செய்ய வேண்டும்?. அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறு மக்களை புலிகள் கொலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன உடலங்களை புதைப்பதற்கு கூட முடியாத நிலை. அந்தளவுக்கு இடைவிடாத எறிகணை பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

அதிபர் ராஜபக்சவும் அவரது படைகளும் செய்து வருகின்ற இனப் படுகொலைகளை சில அனைத்துலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இனப் படுகொலைகள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை என்றார் சம்பந்தன்.

கூட்டத்தில் தமிழ் எம்.பிக்கள் குழு தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட எம்.பி. என்.சிறீக்காந்தா, திரிகோணமலை மாவட்ட எம்.பி. துரைரத்ணம், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger