வன்னிப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இலங்கை ராணுவம் நடத்திய பயங்கர வெறித் தாக்குதலில் 49 சிறார்கள் உள்பட 108 தமிழர்கள் படு கோரமாக கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியிலிருந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தப்பி ஓடி வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் பாதுகாப்பு வலையப் பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இந்த கொடூரத் தாக்குதலை இலங்கைப் படையினர் மேற்கொண்டனர். கொத்து வெடிகுண்டுகளை வீசி மிகக் கொடூரமாக படுகொலையை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பயங்கர தாக்குதலில் 223 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் இலங்கைப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து வெடிகுண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.
ஆர்ட்டிலரி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் மக்கள் மீது விழுந்து வெடித்துள்ளன.
அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். தூக்கத்திலேயே பெரும்பாலானவர்கள் படுகொலையாகியுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.
அப்பகுதியில் இருந்து மரண ஓலமாக இருப்பதாகவும், எங்கு போவது என்று தெரியாமல் காயமடைந்தவர்களுடன் உயிர் தப்பியவர்கள், நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.