
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சிட்னி நகரில் இரண்டு இந்தியர்களை இரண்டு ஆஸ்திரேலியர்கள் பீர் பாட்டிலால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் தாக்குதல் தடுத்த நிறுத்த தேவையான முயற்சி மேற்கொள்ளப்படும். போலீசார் 24 மணி நேர ரோந்து செல்வார்கள் என தொடர்ந்து கூறி வந்தாலும் தாக்குதல்கள் நின்ற பாடு இல்லை.
இந்நிலையில் இன்று காலை சிட்னியில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இந்திய மாணவர்களை இரண்டு ஆஸ்திரேலியர்கள் தாக்கியுள்ளனர். முதலில் இந்தியர்களிடம் வம்பிழுத்து விவாதம் செய்த ஆஸ்திரேலியர்கள், பின்னர் அவர்களை தங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு இந்தியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவருக்கு 16 வயது என்றும் அவர் பீக்ஹர்ஸ்ட் பகுதியை சேர்ந்தவன் என்றும், 17 வயதான மற்றொருவன் ஹர்ஸ்விலே பகுதியில் வசிப்பவன் என்றும் தெரிகிறது. இவர்கள் இருவரையும் விசாரித்த போலீசார் வரும் ஜூலை 20ம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி ஜாமீனில் விடுவித்தனர்.
காயமடைந்த இரண்டு இந்தியர்களும் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.