இலங்கையில் மசூதி அருகே மனித வெடிகுண்டு தாக்குதல்-2 அமைச்சர்கள் காயம்- 15 பேர் பலி
இலங்கையின் தென் பகுதியில் உள்ள மத்தாரை நகரில் மசூதி அருகே நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 2 அமைச்சர்கள் காயமடைந்தனர். மேலும் 15 பேர் பலியாயினர். இதில் ஒரு அமைச்சரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நனயகாரா கூறுகையில், மத்தாரை நகரில் அகுரய்யா என்ற இடத்தில் கொடபிதிய பகுதியில் உள்ள மசூதி அருகே இன்று காலை மிலாது நபி பேரணி நடந்து கொண்டிருந்தபோது இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலை புலிகள் தான் நடத்தியுள்ளனர் என்றார்.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா கூறுகையில், இந்த சம்பவத்தில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இதில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, கலாச்சாரத்துறை அமைச்சர் மகிந்தா யபா அபேவர்தனே ஆகியோர் காயமடைந்தனர், மேலும் 20க்கும் மேற்பட்ட பொது மக்களும் காயமடைந்துள்ளனர் என்றார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் விஜேசேகராவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.
இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் பெளசி கூறுகையில், மசூதி அருகே நடந்த பேரணியில் நான் உள்பட 6 அமைச்சர்கள் பங்கேற்றோம். அமைச்சர்கள் நடந்து சென்ற இடத்துக்கு அருகே இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இதில் விஜேசேகராவும் அபேவர்தனேவும் காயமடைந்தனர் என்றார்.
யாழ்பாணத்தில் ஊடுருவிய புலிகள்:
இதற்கிடையே புதுக்குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்துள்ள ராணுவத்தினரின் அரண்களை உடைத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் பலியாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் பின்னால் இருந்து நடத்தும் இந்தத் தாக்குதலால் ராணுவம் நிலை குலைந்துள்ளது. மேலும் பல ஆண்டுகளாகவே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்பாணத்திலும் புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையில் யாழ்பாணம் பகுதியில் தொடர்ந்து கடும் துப்பாக்கி சண்டையும், பீரங்கி சண்டையும் நடந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை-வெள்ளம், குண்டுவீச்சு-71 பேர் பலி:
இந் நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தால் இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறை காற்றும் வீசுகிறது. இதனால் தமிழர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் சரிந்துவிட்டன. மழையிலும், காற்றிலும் ஒதுங்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் மீதும் இலங்கை ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியதுடன் விமானங்கள் மூலம் குண்டு வீசியதில் 71 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
ராணுவத்தின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க மக்கள் பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர். ஆனால் அதிலும் வெள்ளம் புகுந்து விட்டதால் ஏராளமானோர் குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மழையால் கூடாரங்கள் சரிந்ததால் 20,000 குடும்பங்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றன.