ஜெயலலிதா என்ற மாயையில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்று இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.
திருப்பூர் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ‘நாதியற்றவனா ஈழத்தமிழன்?’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மணிவண்ணன் பேசுகையில்,
திரைப்பட இயக்குனர் சீமான் உணர்ச்சிகரமாக பேச கூடியவர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் என்று கலைஞர் கூறுகிறார். இந்த காமெடியை படத்தில் கூட வைக்க முடியாது.
தமிழக சட்டம்-ஒழுங்கை மத்திய அரசு கையில் வைத்து இருக்கிறது என்றால் கலைஞர் திமுகவை கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து விடலாம்.ஈழத் தமிழர்களுக்காக மதிமுக குரல் கொடுத்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வகிப்பதால், அரசியல் நிர்பந்தம் காரணமாக இலங்கை தமிழர் பிரச்சினையில் மதிமுக செயல்படுவதில் தடைகள் உருவாகி வருகின்றன.
இதன்காரணமாக இவ்வளவு காலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பாடுபட்டு வந்த மதிமுகவும் பழிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். ஜெயலலிதா என்ற மாயையில் இருந்து மதிமுக விலக வேண்டும். அந்தக் கூட்டணியில் இருக்கும் வரை நீங்கள் என்னதான் போராடினாலும் உங்களுக்கு நம்பகத்தன்மை இருக்காது. அதிமுகவை விட்டு வெளியே வாங்க வைகோ அவர்களே…, என்றார்
.நாடகமாடுகிறார்கள் - நெடுமாறன்!
கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் பேசுகையில், உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களும் போலீசாரும் மோதிக் கொண்டது, திட்டமிட்ட நாடகமே.
ஈழ தமிழர்களுக்காக இங்கு யார் போராட்டம் நடத்தினாலும் எனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று கலைஞர் புலம்புகிறார். நாங்கள் உங்கள் ஆட்சியை கவிழ்க்க போராடவில்லை, ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் போராடவில்லை என்பதால் தான் இந்த இயக்கத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
ஈழத் தமிழர்களுக்கான எங்களுடன் நீங்கள் சேர்ந்து போராடினால் இன்னும் 100 ஆண்டு காலம் நீங்களும், உங்கள் கட்சியினரும் ஆட்சியில் நீடிக்கமுடியும். உங்கள் மீது ஒரு துரும்பு கூட விழாமல் நாங்கள் பாதுகாப்போம்.
இலங்கை தமிழர் பிரச்சனையை வக்கீல்கள், போலீசார் மோதலை நடத்தி திசைதிருப்பி கொச்சைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் நீதிமன்ற வரலாற்றில் அழியாத ஒரு சம்பவமாக இருக்கும்.
ஒருநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தங்கபாலு கூறுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் இனவெறி தாக்குதல் நடந்தபோது, இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு தென்னாப்பிரிக்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்திரா காந்தி ஆட்சியின் போது வங்கதேச பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லையா?
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது மனிதாபிமான பிரச்சினையாகத்தான் உலக நாடுகள் பார்க்க வேண்டும். இந்திய துறைமுகங்கள், விமானத் தளங்கள் மூலம் பல்வேறு நாட்டில் இருந்து ஆயுத உதவிகள் இலங்கைக்கு செல்வதை தடுத்து நிறுத்தினாலே இலங்கையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்.
நாடாளுமன்றத் தேர்தலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் எம்.பி கூட வெற்றி பெற்று சென்று விடக்கூடாது. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினருக்கும் இதை அறிய செய்ய வேண்டும் என்றார் நெடுமாறன்.