புகார் கூறும் பூங்கொடி (ஜெயலலிதா)-கருணாநிதி
தேர்தல் வந்து விட்டால் போதும் குறை சொல்ல ஆரம்பிப்பதுதான் அவரது முதல் வேலை. ஏதோ தேர்தல் ஆணையத்தை விட உயர்ந்த அமைப்பின் தலைவர் என்ற எண்ணம் அவருக்கு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று ஜெயலலிதா கூறியிருந்த புகார்களுக்குப் பதிலளித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், ஜெயலலிதாவுக்கு முதல் வேலை, ஏதோ தானே தேர்தல் ஆணையத்தை விட அதிகாரம் படைத்த மேல் அமைப்பின் தலைவர் பதவியில் இருப்பதைப் போல எண்ணிக் கொண்டு உத்தரவிட ஆரம்பித்து விடுவார்.
கடந்த காலத்தில் தேர்தல் ஆணையங்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆணையத்தின் பரிந்துரைகளை அல்லது உத்தரவுகளை நிறைவேற்றாமல், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரையில் சென்றார்.
ஒரு தேர்தலில் வாக்குப் பதிவு செய்யும் மின் இயந்திரம் கோளாறு என்பார்; இன்னொரு தேர்தலில் அந்த மின் இயந்திரத்தையே மாற்ற வேண்டும், பழையபடி வாக்குச் சீட்டுகளை பதிவு செய்யும் முறையைக் கொண்டு வர வேண்டும் எனக் கூறுவார்.
அப்படிச் செய்தால், மை யிலே கோளாறு என்பார். அதுவே, அவரோ, அல்லது அவரது கட்சியோ தேர்தலில் வெற்றி பெற்றால், அப்போது மின் இயந்திர வாக்குப் பதிவு முறை சிறப்பாக நடந்தது என்பார். ஒரு குறையும் சொல்ல மாட்டார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்ற பிறகும், தேர்தல் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, மற்றவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எல்லாம் உதய சூரியன் சின்னத்தில் பதிவாகி விட்டது என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டார்.
அந்தத் தேர்தலில் அவர் கருதியபடி பல அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்தது. அப்போது ஆணையர் நேர்மையானவர் என்று ஜெயலலிதா சொன்னார். பிறகுதான் தோற்கடிக்கப்பட்டார். இப்படி தேர்தல் நேரத்தில் எல்லோரும் உச்ச கட்ட அதிகாரம் தனக்கு இருப்பதாக நம்ப வேண்டும், பயந்து கொண்டு வாக்குகளை தனக்கு அளிக்க வேண்டும் என்று மனப்பால் குடித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு அச்சமூட்டுவது இவருக்கு வாடிக்கை.
தான் நடந்துவந்த பாதையில், நீதியையும் நேர்மையையும் மிதித்து, ஒழித்து விட்டு இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்ய கிளம்பி விட்டார். நாடாளுமன்ற தேர்தலில் ஆணையத்தின் அறிவிப்புகளையும் நிபந்தனைகளையும் திமுக கூட்டணியினர் மீறி நடக்கிறார்கள் என்ற புகார் கூறும் பூங்கொடியாக காட்சி தருகிறார்.
ஆணைய உத்தரவின் பேரில் பணி மாறுதல் செய்யப்பட்ட அனைவரும் மாற்றம் செய்யப்பட்டார்களா என்பதை தேர்தல் ஆணையம் கண்டறிய வேண்டும் என்று ஒரு புகார் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளை பெரிய அளவில் வெளியிடுவதற்கென்றே இருக்கின்ற சில பத்திரிகைகள், இதை வெளியிட்டு கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன?
சென்னையில் மட்டும் தேர்தல் ஆணைய நெறிமுறைகளின் படி 138 காவல் ஆய்வாளர்கள், 18 உதவி ஆணையர்கள் மாற்றப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இவர்களில் 134 காவல் ஆய்வாளர்களும், 15 உதவி ஆணையர்களும் அவர்களுக்கென்று குறிப்பிட்ட புதிய பணியில் சேர்ந்து விட்டார்கள். மூன்று காவல் ஆய்வாளர்கள் நாளை மறுநாள் புதிய பணியில் சேருவதாக கூறியுள்ளனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
உதவி ஆணையர்களை பொறுத்தவரை ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் புதிய பணியில் சேராத காரணத்தால், அவருடைய மாறுதலுடன் தொடர்புள்ள மாறுதல் என்ற அடிப்படையில் மற்ற இருவர் புதிய பணியிலே சேராமல் உள்ளார்கள். அவர்களும் விரைவில் புதிய பணியிலே சேரவுள்ளார்கள்.
மதுரையை பொறுத்தவரை, யாரோ சிலர் மாற்றப்பட்டதற்குப் பிறகும், அங்கேயே பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். மதுரையில் 4 உதவி ஆணையர்களும் தேர்தல் நெறிமுறைப்படி மாற்றப்பட்டார்கள். அவர்களில் இருவர் ஏற்கனவே பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மற்ற இருவர் விடுப்பிலே சென்றுள்ளார்கள்.
அரசு அலுவலர் விதிமுறைப்படி, ஒரு அலுவலர் தகுந்த காரணத்தின் அடிப்படையில் விடுப்பிலே செல்வதை தடுக்க முடியாது. எனவே, மதுரையில் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மதுரை மாவட்டத்திலேயே பணி புரிந்து வருவதாக ஜெயலலிதா கூறியிருப்பது பொய்யான தகவலாகும்.
அறிக்கையை முடிக்கும்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக நடப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது, நீதிபதிகளை மிரட்டுவது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது ஆகியவை எனக்கு கை வந்த கலை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
இவை அனைத்தும் ஜெயலலிதாவிற்கு தான் கை வந்த கலையே தவிர எனக்கும் கை வந்த கலை அல்ல. தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் சென்னைக்கு வந்தபோது அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே வர விடாமல் கெரோ செய்ததும், பின்னர் அவர் தங்கியிருந்து ஓட்டலுக்கு சென்று தாக்கியதும் தமிழகம் அறியாதவையா என்ன?
அதிகாரிகள் மாறுதல்கள் எல்லாம் நிர்வாகத்தின் சம்மந்தப்பட்டவைகளே தவிர ஏதோ ஜெயலலிதா பூதாகரமாக அறிக்கை விட்டிருப்பதைப் போல எந்தவிதமான தேர்தல் நெறிமுறை மீறல்களும் அல்ல என்பதையும், இட்டுக் கட்டி ஜெயலலிதா பொய் புகார்களை கூறுகிறார் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Labels:
NEWS