Latest Movie :

ஜெர்மனி-தூதரகங்கள் முன்பு தமிழர்கள் போராட்டம்

இலங்கை அரசின் தமிழினப் படுகொலைக்கு ஆதரவாக உள்ள அரசுகளின் துணைத் தூதரகங்கள் முன்பு ஜெர்மனி வாழ் தமிழர்கள் பிரமாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

டுசில்டோவ் நகரில் அமைந்துள்ள இணைத் தலைமை நாடுகளின் துணைத் தூதரகங்கள் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.

டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் வாயிலில் ஒன்றுகூடிய தமிழர்கள் முதலில் அமெரிக்கத் துணைத் தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

டுசில்டோவ் அமெரிக்கத் துணைத் தூதரகத்தினால் மனு வாங்குவதற்கு நேரம் ஒதுக்கப்பட்ட போதும், பின்னர் அவர்கள் மனு வாங்க மறுத்ததால் கொதிப்படைந்த தமிழர்கள் தூதரகத்தின் அதிகாரிகள் வந்து மனுவை வாங்காவிட்டால் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

இதையடுத்து அமெரிக்க துணைத் தூதரக செயலாளர் மனுவினைப் பெற்றுக் கொண்டார். மனுவினை தமிழர்கள் சார்பில் அருட்தந்தை ஆண்டனி பாலா வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் கண்டனப் பேரணி ஜப்பானிய துணைத் தூதரகத்தை சென்றடைந்தது. 

தமிழர்களைச் சந்திக்க விரும்பாத ஜப்பானிய துணைத் தூதரகம் அதற்கான நேரத்தை ஏற்கனவே ஒதுக்கித்தர மறுத்திருந்தது.

எனினும் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை ஜெர்மனி காவல்துறையினர் ஜப்பானிய துணைத் தூதரகத்தில் தெரிவித்தனர். இதையடுத்து தமிழர் பிரதிநிதிகளிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டனர் ஜப்பானிய தூதரக அதிகாரிகள்.

அந்த சமயத்தில், தமிழ் இளைஞர்கள் சிலர் ஜப்பானிய பிரதமர் யசூசி அகாசியின் படத்தின் மீது முட்டைகளை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போராட்டம் பிரிட்டன் தூதரகத்தை அடைந்தது. தமிழர்கள் உறுதியுடனும், கோபத்துடனும் வருவதை அறிந்து, தூதரக வாயிலில் அதிக அளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணைத் தூதரகம் முன்பாக ராஜபக்சேவின் கொடும்பாவியும், இலங்கை தேசிய கொடியும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து பிரித்தானிய துணைத் தூதரக அதிகாரிகளிடம் அருட்தந்தை கலாநிதி எஸ்.ஜே.இமானுவல் அடிகளார் மனுவினை அளித்தார்.

அதன் பின்னர் துணைத் தூதரகம் முன்பு பல்வேறு தலைவர்கள் பேசினர்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger