உலகத் தமிழர்களுக்காக ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து எழுதப் போவதாகத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி, உலகமே எழுந்து நின்று கை தட்டுகிறது. இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இன்று தமிழ் திரையுலகுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் உலக திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்திருக்கிறது.
மலேசியத் தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை பாடினார்கள். இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நீராரும் கடலுடுத்த... என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.
நீராரும் கடலுடுத்த... பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. அதை உலக தமிழன் எப்படி பாடுவான்? இந்த சிக்கலைத் தீர்க்க உலக தமிழர்களுக்காக, புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப் போகிறேன். அந்த பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்திருக்கிறார்.
தமிழன் எடுக்கிற படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று இப்போது சிலர் கேட்கிறார்கள். இங்குள்ள கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உலக கலைஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்கரை வெல்லும் தகுதி நம்மவர்களுக்கு இருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்த தமிழ் இயக்குனர்கள், ஆஸ்கார் விருதுக்கான ஆங்கிலப் படங்களை எடுக்க வேண்டும் என்றார் வைரமுத்து.