Latest Movie :

காவல் நிலையத்தில் சிறுவன் சித்திரவதை - எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனை சித்திரவதை செய்து, அவனது முகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் பான்பராக் எச்சிலை உமிழ்ந்து அவமானப்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேனி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மதுரை உயர்நீதி்மன்றக் கிளை.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 21-ந்தேதி புதுக் கோட்டையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சிலர் என் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் சில நபர்களை பற்றி என்னிடம் கேட்டனர். அவர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றேன். பின்னர் சென்று விட்டார்கள்.

மறுநாள் வந்த போலீசார் என் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினர். 14 வயதாகும் எனது மகன் ஜோதிபாசுவை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை.

இதுகுறித்து தேனி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

அப்போது சிறுவன் ஜோதிபாசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் நீதிபதிகள் முன்பு அளித்த வாக்குமூலத்தில், 

போலீசார் வேனில் என்னை கடத்தி சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்தனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாயில் இருந்த பான்பராக்கை என்மீது உமிழ்ந்தார் என்று கூறியபடி ஆடையில் படிந் திருந்த பான்பராக்கை காட்டினான். சித்ரவதை அதிகமானதால் போலீஸ் பிடியில் இருந்து தப்பி விட்டேன் என்றான்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க தேனி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கன்னத்தில் அடித்த ஆசிரியை - பார்வையிழந்த மாணவன்


இதற்கிடையே, சென்னை அருகே ஆசிரியை பிரம்பால் மாணவனை அடித்ததில், அவனுடைய கண் பார்வை பறிபோய் விட்டது.

அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்நதவர் செங்கமங்கலம், இவரது மகன் ராஜபாண்டி (10). இவன் அம்பத்தூரில் உள்ள செயின்ட் மேரிஸ் நர்சரி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். 

சம்பவ தினத்தன்று மாணவன் ராஜபாண்டி, வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஆசிரியை மரகதம் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர் ராஜபாண்டியின் கண்பார்வை பறிபோனதாக அவனது தந்தை செங்கமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். 

இது தொடர்பாக அவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் நேற்று புகார் மனு கொடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எனது மகன்கள் ராஜபாண்டி, வெள்ளைசாமி இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்து வந்தனர். மூத்தமகன் ராஜபாண்டியை, வகுப்பறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததற்காக ஆசிரியை மரகதம் கம்பால் அடித்துள்ளார். 

அப்போது அவனது கண்ணில் அடிபட்டுள்ளது. இதனால் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் ராஜபாண்டியை சிகிச்சைக்காக சேர்த்தேன். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. கருவிழியில் கீறல் விழுந்துள்ளதாகவும், இனிமேல் ராஜபாண்டியின் வலது கண்ணில் பார்வை வராது என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த நான் பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டேன். ஆனால் அங்கிருந்தவர்கள் உங்களது மகனை யாரும் அடிக்கவில்லை. அவன் கீழே விழுந்ததில் கண்ணில் காயம் ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்தனர். 

மேலும் பள்ளிக்கட்டணத்தை முறையாக கட்டவில்லை என்று கூறி எனக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து ரூ.10 ஆயிரம் பணத்துடன் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்காக நான் சென்றேன். ஆனால் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. எனது 2 மகன்களையும் தற்போது பள்ளியில் சேர்க்க மறுத்து வருகின்றனர்.

எனவே புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து முறையிட்டேன். இதில் குற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.

அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீனிவாசன் இதுகுறித்து விளக்குகையில், 

ஆசிரியை மரகதம் மீதான புகார் குறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் வசந்தா விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி நிர்வாகத்திடமும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

விசாரணை முடிந்த பின்னரே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger