Latest Movie :

ஜெயலலிதாவுக்கு ஜனநாயகம் என்றாலே கசக்கும் -முதல்வர் கருணாநிதி


எதற்கெடுத்தாலும் விசித்திர வாதம் செய்யும் ஜெயலலிதாவுக்கு ஜனநாயகம் என்றாலே கசக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெயக்குமார், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், அதனால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தாரே?

கருணாநிதி: 1989ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து முதல் நிதி நிலை அறிக்கையை நான் அவையிலே சமர்ப்பிக்க முனைந்த போதே, என் கையிலிருந்த நிதி நிலை அறிக்கையைப் பிடுங்க முற்பட்டு, என்னை தாக்கவும் செய்து, என் கண்ணாடியை உடைத்து, ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்தி, அதனை ஏடுகளில் வெளி வரச் செய்து, தன் தலையை தானே கலைத்து விட்டுக் கொண்டு சட்டம்-ஒழுங்கு தமிழகத்திலே கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற பல்லவியை ஆரம்பித்தவர்,

தொடர்ந்து டெல்லியில் சந்திரசேகரையும், ஆர். வெங்கட்ராமனையும் பிடித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டு 1991ம் ஆண்டு ஜனவரியில் கழக ஆட்சியைக் கலைக்கச் செய்தார்.

அந்த ஒரு அனுபவத்தில் தற்போதும் 2006ம் ஆண்டு திமுக மீண்டும் பதவிக்கு வந்த நாள் முதல், தமிழகத்திலே ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும், உடனே சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று அறிக்கை விடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். எந்தப் பிரச்சினை குறித்த அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது. அறிக்கையால் பயனில்லை என்றதும், இப்போது உச்ச நீதிமன்றத்திற்கே சென்று வழக்கு போடும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்.

உயர் நீதிமன்றத்திலே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறுக்காக ஒரு ஆட்சியையே கலைக்க வேண்டுமென்றால், நள்ளிரவில் முன்னாள் முதலமைச்சரான என்னை வீடு புகுந்து காவல் துறையினரை விட்டு தாக்கி கைது செய்தார்களே, அது பற்றி கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோரை காவல் துறையினரை விட்டுத் தாக்கி கைது செய்தார்களே, அதற்கெல்லாம் என்ன செய்வது?.

ஏன் மாநில ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி காரிலே சென்று கொண்டிருந்த போது, கட்சிக்காரர்களை விட்டு திண்டிவனத்தில் காரை மறித்து தாக்கச் செய்தார்களே, அதற்காக என்ன செய்வது?.

மத்திய தேர்தல் கமிஷனராக இருந்த டி.என். சேஷனை விமான நிலையத்திலிருந்து வெளியே வர விடாமல் "கேரோ'' செய்ததோடு, அவர் தங்கியிருந்த விடுதியைத் தாக்கி நாசம் செய்தார்களே, அதற்காக என்ன செய்வது?

மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை திருச்சியிலே தாக்கினார்களே, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், விஜயன் போன்றவர்களை கொலை செய்யவே முயற்சி நடந்ததே, அதற்காக என்ன செய்வது?.

நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணனின் மருமகன், எம்.ஜி.ஆர். அலுவலக மேலாளர் முத்து மீதெல்லாம் "கஞ்சா'' வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டதே, அதற்காக என்ன செய்வது? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட வன்முறைகளுக்கும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவிற்கும் காரணமானவர்கள் தான் தற்போது திமுக ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார்கள். அதன் உச்ச கட்டமாகத்தான் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்துள்ளார்கள்.

தற்போது ஆட்சியைக் கலைக்க ஜெயலலிதாவும், ஜெயக்குமாரும் சொல்கின்ற காரணம் தமிழகத்தில் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன என்பதாகும்.

ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், ஏன் நீதிமன்றங்கள் உட்பட முடங்கிக் கிடந்தனவே. பத்து லட்சம் அரசு அலுவலர்கள் பணிக்கு வராமல் வீட்டிலேயே கிடந்தார்கள். அதிமுக அரசு இரண்டு லட்சம் அலுவலர்களை ஒரே ஆணைப்படி டிஸ்மிஸ் செய்தது. இரு பதாயிரம் பேர்களை இரவோடு இரவாக புதிதாக வேலையிலே நியமித்தது. மாநிலமே ஸ்தம்பித்து கிடந்தது.

அரசு அலுவலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து நியாயம் பெற்றார்களே, அப்போது அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டதா என்ன?

சுப்பிரமணிய சாமி மீது வழக்கறிஞர்கள் அழுகிய முட்டைகளை வீசியதற்காக தற்போது கவலைப்படும் அதிமுக, அவர்கள் ஆட்சிக் காலத்தில் அதே சுப்பிரமணிய சாமியை, அதே உயர் நீதிமன்றத்தில் என்ன பாடுபடுத்தினார்கள்? எத்தகைய காட்சியையெல்லாம் அன்றைய தினம் சுப்பிரமணிய சாமியும், பத்திரிகையாளர்களும் காண நேரிட்டது? மக்கள் அவைகளை எல்லாம் மறந்து விட்டார்களா என்ன?

அதிமுக சார்பில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதால், 356வது பிரிவைப் பயன்படுத்தி, தமிழக அரசைக் கலைக்க வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது அரசியல் உள் நோக்கம் கொண்டது- 356வது சட்டப் பிரிவைப் பயன்படுத்த நாங்கள் கவர்னர் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

"ஆட்சியைக் கலையுங்கள்'' என்று சொல்வதற்கு எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்று கூட தெரியாமல் உச்ச நீதிமன்றம் சென்று, அங்கே குட்டுப்பட்டவர்களுக்கு, பாவம் தலை மிகவும் வீங்கத் தான் செய்யும். அவர்கள் பக்கமுள்ள பத்திரிகையாளர்கள் தான் மருந்து போட வேண்டும்.

கேள்வி: மாநில அரசு அலுவலர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவித்திருக்கிறீர்களே?

கருணாநிதி: ஆமாம், மத்திய அரசு தனது அலுவலர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்த அதே நாளில், அதைப் பற்றி கோரிக்கையை யாரும் எழுப்பாத நிலையில்- மாநில அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு விட்டது.

மேலும், மத்திய அரசு அந்த அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதைப் போலவே, தமிழக அரசும் 1.1.2009 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும், அதுவும் ரொக்கமாகவே அந்தத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தோம்.

அதிமுக ஆட்சியில் எஸ்மா, டெஸ்மா கொடுமைகளால் அவதிப்பட்டு, சிறைச்சாலை, நீதிமன்றம் என்று அலைய நேரிட்ட அரசு அலுவலர்கள், தற்போது உற்சாகம் மேலிட பணியாற்றும் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி: திருமங்கலம் தேர்தல் குறித்து முழு ஆய்வு செய்யும்படியும், மறு தேர்தல் நடத்தும்படியும், மக்களவை தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளாரே?

கருணாநிதி: ஜெயலலிதா சுட்டிக்காட்டுகிற அதிகாரிகளையெல்லாம் அவர் சொல்லுகின்ற இடங்களுக்குப் பந்தாடி விட்டு - வாக்களிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், அவர் இஷ்டப்படி வாக்குகளைப் போட்டுக் கொள்ளலாம், வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் வாய் திறந்து சொல்லுகிற வரையில் தேர்தலுக்குத் தேர்தல் ஜெயலலிதா இப்படித் தான் விண்ணப்பங்களை அனுப்புவார், விசித்திர வாதம் செய்வார். ஜனநாயகம் என்றாலே அத்தனை கசப்பு அவருக்கு!.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger