ரஜினியின் எந்திரன் வெற்றி பெறுமா?
எந்திரன் படத்தை சன்பிக்சர்ஸிடம் கொடுத்துவிட்டு ஓரமாக ஒதுங்கிக் கொண்டது ஐங்கரன் நிறுவனம். கோடிகளில் பல படங்களைத் தயாரித்த ஐங்கரன் நிறுவனம் எந்திரனைக் கைமாற்றியதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டன. இப்போது எந்திரன் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரஜினி, ஷங்கர், சன் பிக்சர் என வலுவான கூட்டணி என்பதால் படத்தின் வெற்றி உறுதி. ரஜினியின் சமீபத்திய படங்கள் சந்திரமுகி, சிவாஜி வெற்றிப் படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எந்திரனுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களே. இவர் இயக்கிய சிவாஜியும் பிரமாண்ட வெற்றி பெற்றது. ஷங்கர் டீமின் கடுமையான உழைப்பு இந்தப் படத்தையும் வெற்றிக்குள்ளாக்கும் என்று நம்பப்படுகிறது. எந்திரனைத் தயாரிக்கும் சன் பிக்சர் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இவர்கள் வாங்கி வெளியிட்ட படங்களில் காதலில் விழுந்தேன் தவிர மற்றவை எல்லாமே சுமார் ரகம் என்றாலும், இவர்களின் அளவுக்கு மீறிய விளம்பரங்களினால் தான் ஓரளவு ஓடின. அந்த படத்தை வேறு நிறுவனங்கள் வாங்கி ரிலீஸ் செய்திருந்தால் நிச்சயம் அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கும். ஒன்றுமே இல்லாத படங்களையே பூதாகரமாக்கிக் காட்டும் சன்பிக்சர்ஸ், தன் மீடியா பலத்தின் மூலம் பிரமாண்டமான படத்தை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டும். இதன் மூலம் எந்திரனின் வெற்றி உறுதிதான் என்றாலும், படத்தை பெரிய அளவிற்கு வெற்றி பெற வைப்பது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.