கொழும்பு: இலங்கை போர் பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை உயிரோடு காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் தமக்கிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் விவகார கமிஷன் தலைவர் ஜான் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜான் ஹோல்ம்ஸ் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று காலை கொழும்பு வந்தார். அவர் யுத்த பகுதியில் தவித்து வரும் அப்பாவிகளின் நிலைமை குறித்து இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ரோகித போகலாகாமா, ஐ.நா., செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனத்தினருடன் பேச்சு நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, உடை, மருந்து ஆகியவை கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தது. இதன் விளைவாக ஹோல்ம்ஸ் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இச்சந்திப்புக்கு பின்னர் இலங்கை வெளியுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹோல்ம்ஸ் வடகிழக்கு பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அங்கு இலங்கை அரசு செய்திருக்கும் துயர் நீக்கும் மையங்களை அவர் பார்வையிட இருக்கிறார். இங்குள்ள சூழ்நிலை குறித்து நல குழுக்களுடன் ஆலோசிக்க இருக்கிறார் என்றார்.
அதிபர் ராஜபக்சேவையும் ஹோல்ம் சந்தி்க்கவுள்ளார்.
சாலைகளில் மனித உடல்கள்-புலிகள்:
விடுதலை புலிகளின் செய்தி குறிப்பில், சமீபத்தில் இலங்கை அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிகளுக்குள் விமானங்களின் மூலம் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களின் உயிர்களை காவு வாங்கியுள்ளனர். அவர்களின் பிணங்கள் குப்பைகளை போல் சாலைகளில் சிதறி கிடக்கின்றன.
கோர தாக்குதலில் பலியான இந்த மனித சிதறல்களை அகற்றுவதற்கே அவர்களுக்கு நீண்ட நேரம் பிடித்தது. இத்தாக்குதல் குற்றுயிரும் குறையுருமாக இருந்த சிலரும் மருந்துகள் கொடுக்கப்படாமல் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 288 தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போர்நிறுத்தம் எதுவும் கொண்டு வரப் போவதில்லை. விடுதலை புலிகள் வசமிருந்த மற்றொரு கிராமத்தையும் கைப்பற்றி உள்ளோம். நாங்கள் பொது மக்களை கொல்லவில்லை. புலிகள் சொல்வதில் உண்மை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பலிதா கோகனா கூறுகையில், இலங்கை விவகாரத்தில் அடுத்தவர்கள் தலையிடுவதை விரும்பவில்லை. இங்கிலாந்து பிரதமரின் தூதர் டேஸ் பிரவ்னி போர் பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கான அவசியம் எதுவுமில்லை.
இது குறித்து நாங்கள் அவர்களுடன் அதற்கு ஆலோசிக்கவும் இல்லை. அங்கு அவர் சென்று பார்வையிடுவதற்கான தேவையும் இல்லை. எங்களின் இந்த நிலையில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை என்றார்.