இலங்கை பிரச்சனைக்காக தேமுதிக தொண்டர்கள் யாரும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர்ந்து இலங்கை தமிழர்களின் இன்னல்களை தீர்க்க ஜனநாயக முறையில் நடத்தி வரும் போராட்டங்களில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் எக்காரணத்தை முன்னிட்டும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
இளைஞர்களின் செயல்கள், இலங்கை தமிழர்களுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்பட வேண்டும். அதற்கு மாறாக அவர்களது உயிரைத் தாங்களே மாய்த்து கொள்வதை கட்சி ஒரு போதும் ஊக்கப்படுத்தாது.
வேலூர் மாவட்டம், வள்ளிப்பட்டு ஊராட்சியை சேர்ந்த எனது உயிரினும் மேலான கட்சியின் கிளை செயலாளர் சீனிவாசன் தீக்குளித்தார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டுமென்று நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்தாகும்.
தீக்குளிக்கும் முயற்சியில் தயவு செய்து கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தீக்குளிப்பது என்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
தீக்குளிப்புகள் வேண்டாம்-விஜய்காந்த் வேண்டுகோள்
Labels:
NEWS