புதுக்குடியிருப்பு பகுதியில் 'க்ளஸ்டர் பாம் தாக்குதல்-53 தமிழர்கள் பலி
Srilanka-cluster-bomb-attack-kills-53-tamilians
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு பகுதிகளான புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் தேவிபுரம் பகுதிகளில் இலங்கைப் படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 53 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 158 பேர் காயமடைந்தனர்.புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் மக்கள் பாதுகாப்பு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நேற்று காலை வரை இலங்கைப் படையினர் இடைவிடாமல் கொத்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து இலங்கைப் படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் சிறார்கள் ஆவர்.
தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை இலங்கைப் படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில், 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 89 பேர் காயமடைந்தனர்.
தேவிபுரம் பகுதியில் மக்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மீது இலங்கைப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இதில் மூன்று பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் இல்லாததால், கடந்த இரண்டு நாட்களில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.