Latest Movie :

இலங்கையில் சுடரொளி பத்திரிக்கை ஆசிரியர் கடத்தி கைது

சுடரொளி பத்திரிக்கை ஆசிரியர்
இலங்கையில் தமிழ்ப் பத்திரிக்கையான சுடரொளியின் ஆசிரியர் நடேசப் பிள்ளை வித்யாதரனை ராணுவம் கடத்திச் சென்று பின்னர் கைது செய்தது.

இலங்கை அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டு வரும் பத்திரிக்கையாளர்களை - அவர்கள் சிங்களர்களாக இருந்தாலும் கூட, குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் அரசும், ராணுவமும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்ப் பத்திரிக்கையான சுடரொளி மற்றும் உதயன் ஆகியவற்றின் முதன்மை ஆசிரியர் வித்யாதரனை ராணுவம் கடத்திச் சென்று பின்னர் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொழும்பில் விடுதலை புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா கூறியுள்ளார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் உள்ள 'மகிந்த' மலர்ச்சாலையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வித்தியாதரன் சென்றபோது, வெள்ளை நிற வேன்கள் மூன்றில் வந்தவர்கள் பலாத்காரமாக வித்தியாதரனைக் கடத்திச் சென்றனர்.

இந்த நிலையில், அவர் கடத்தப்படவில்லை என்றும் விசாரணை செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கல்கிசையில் கைது செய்ததாகவும் இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் வித்தியாதரனை கடத்த முயன்றபோது அவர் சத்தம் போட்டுக் கத்தினார் என்றும், அவரைக் காப்பாற்ற ஓடி வந்தவர்களை வேன்களில் இருந்த மர்ம நபர்கள் தாக்கிவிட்டுச் சென்றனர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

ஆயுதங்களுடன் காணப்பட்ட அவர்களில் சிலர் சீருடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வித்தியாதரனின் உறவினர்கள் கல்கிசை மற்றும் வெள்ளவத்தை காவல் நிலையங்களிலும் புகார் கொடுத்துள்ளனர்.

இன்று காலை 9.45 மணிக்கு வித்தியாதரன் கடத்தப்பட்டார். இந்த நிலையில் பிற்பகல் 12.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.

இலங்கையில் பத்திரிக்கையாளர்களை குறி வைத்து நடந்து வரும் நடவடிக்கைகளில் தற்போது வித்தியாதரன் சிக்கியிருப்பதாக கருதப்படுகிறது.


Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger