தினசரி நூற்றுக்கணக்கான தமிழர்களை இலங்கைப் படைகள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன. கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் எரிகுண்டுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பெருமளவில் இனப்படுகொலையை இலங்கை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் முழு ஆதரவும் இருப்பதால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், ஐ.நா. சபை, உலக நாடுகளின் கடும் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் தனது பாதையில் அழிவு நடை போட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
இந்த நிலையில், இனப் பிரச்சினையில் ஐ.நா. சபை மட்டுமல்ல, எந்த ஒரு உலக நாடும் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ராஜபக்சே கொக்கரித்துள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் நடந்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
நாங்கள் மக்களை எப்படி பாதுகாப்பது காக்கின்றோம் என்பதை அறிய வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இங்கு வந்து பார்த்து விட்டு போகட்டும்.
மக்களை பாதுகாக்கின்ற முறைகள் பற்றி இலங்கைக்கு சர்வதேச நாடுகள் பாடம் கற்பிக்கத் தேவையில்லை.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளும் சொல்கின்றன. ஐ.நா.சபை மூலம் போரை நிறுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
எங்கள் இனப்பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது.
இலங்கை மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க மாட்டோம். அதற்கு என் தலைமையிலான அரசாங்கம் ஒரு போதும் இடம் கொடுக்காது என்று ஆணவத்துடன் கூறினார் ராஜபக்சே.