எந்திரன் படத்தில் ரஜினியின் சிகையலங்கார நிபுணராகப் பணியாற்றுகிறார் ஆலிம். ரஜினிக்கு விதவிதமான சிகையலங்காரங்களை அவர் செய்துள்ளார். இதற்கென ஸ்பெஷல் விக்குகளை அவர் தருவித்துள்ளார். ஒரிஜினல் முடி போலவே அட்டகாசமாகப் பொருந்துமளவு ரஜினிக்கு சிகையலங்காரம் செய்துள்ளாராம் ஆலிம்.
குறிப்பாக எந்திரனாக வரும் ரஜினிக்கு மேக்கப், உடைகள் என அனைத்து விஷயங்களிலும் சர்வதேச தரத்தைக் கடைப்பிடிக்கிறார்களாம். எந்திரன் வேடத்தில் வரும் ரஜினிக்காக மட்டும் 3 மணிநேரம் வரை மேக்கப் போடுகிறார்களாம்.
சிவாஜியில் ரஜினிக்கு உடையலங்காரம் செய்த இந்தியாவின் முதல்நிலை ஆடையலங்கார நிபுணர் மணீஷ் மல்ஹோத்ராதான் இந்தப் படத்திலும் ரஜினிக்கு அசத்தல் உடைகளை வடிவமைத்துள்ளார்.
படப்பிடிப்புக் குழுனருடன் தற்போது சென்னையில் உள்ள ரஜினியின் சிகையலங்கார நிபுணர் ஆலிம், எந்திரனில் தனது அனுபவம் குறித்துக் கூறியதாவது:
"ரஜினி சாரின் ஹேர்ஸ்டைல் இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். எத்தனையோ ரஜினி படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த அளவு கச்சிதமான, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அவரைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.
எந்திரன் ரஜினிக்கு நான் செய்திருக்கும் ஹேர் ஸ்டைல் இது வரை நான் பணியாற்றிய படங்களில் சிறந்தது என்பேன்", என்றவர், தனிப்பட்ட முறையில் ரஜினியின் இயல்பு குறித்து வெகுவாகப் புகழ்ந்தார்.
"அவரது ரசிகர்களில் பலர் ரஜினியைக் கடவுள் மாதிரி உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது எனக்கு மிகுந்த வியப்பைத் தருகிறது. இதுவரை நான் பார்க்காத, கேள்விப்படாத விஷயம் இது. ஆனால் இந்த மனிதரோ அவ்வளவு எளிமையாகப் பழகுகிறார். இதுவும் நான் பார்க்காத அதிசயம்தான்.
பாலிவுட்டில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவன் என்ற முறையிலும், ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் என்ற முறையிலும் சொல்கிறேன்... இந்தியாவில் நான் பார்த்த மிகவும் ஸ்டைலிஷான நடிகர் என்றால் அது ரஜினிதான். அவருக்குப் பிறகுதான் சஞ்சய் தத், சல்மான் கான் போன்றவர்கள், என்றார் ஆலிம்.