இலங்கைப் படையினர் நேற்று முதியோர் இல்லத்தையும் சரமாரியாக வெறித்தனமாக தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் நான்கு முதியவர்கள் உள்பட 79 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர். 172 பேர் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்ட முதியவர்களில் ஒருவருக்கு 101 வயதாகிறது. இன்னொருவருக்கு 99 என்பது வேதனைக்குரியது. மற்ற இருவருக்கும் முறையே 86,80 வயதாகும்.
அன்புச்சோலை மூதாளர் பேணலகம் என்ற அந்த முதியோர் இல்லத்தின் மீது நேற்று இலங்கை ராணுவம் பீரங்கிகளால் சரமாரியாக சுட்டுத் தள்ளியது.
இதில், கருப்பையா (101), வள்ளி ஆச்சி (99),பொன்னம்மா (80), இளையபிள்ளை (86) ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
வேலாச்சி (97), செல்லையா (98),பழனி (79), கிருஷ்ணன் (80), இராஜேஸ்வரி (67), பராமரிப்பாளர் கருணாகரன் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட புது மாத்தளன் பகுதியில்தான் இந்த முதியோர் இல்லம் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடந்த விமான்படைத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன், தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது நேற்று எறிகணைத் தாக்குதல் நடந்தது. இதில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
மக்கள் பாதுகாப்பு வளைய பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று காலை நடந்த விமானத் தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் நோக்கி நேற்று இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் நடந்த ஆர்ட்டில்லரி, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 12 சிறார்கள் உள்பட 18 தமிழர்கள் படுகொலையானார்கள்.
புதுக்குடியிருப்பில் நேற்று இரவு 9.50 முதல் 10.15 வரை எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 தமிழர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.