விடுதலைப் புலிகள் தங்களது விமானங்களை எரித்து விட்டதாக ராணுவம் நேற்றுதான் கூறியிருந்த நிலையில், நேற்று இரவு கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் தங்களது இரு விமானங்கள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் பலியானார்கள். 47 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இரு விமானங்களையும் சுட்டு வீழ்த்தி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒரு விமானத்தின் சேதமடைந்த பகுதியும், ஒரு விடுதலைப் புலி வீரரின் உடலும் மட்டுமே கிடைத்துள்ளன.
புத்தளம் பகுதி வழியாக நேற்று இரவு 9 மணியளவில் இரண்டு விமானங்கள் கொழும்பு நகரை நோக்கி வருவது, ரேடார்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தலைநகர் கொழும்பு உஷார்படுத்தப்பட்டது. விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
பின்னர் வானத்தை நோக்கி தொடர்ந்து விமான எதிர்ப்பு பீரங்கிகளால் ராணுவத்தினர் சுட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு தொடர்ந்து பீரங்கிச் சத்தம் கேட்டபடி இருந்தது.
இந்த நிலையில் புலிகளின் முதல் விமானம் அதிக பட்ச பாதுகாப்பு வலையப் பகுதியில் உள்ள விமானப்படை தலைமையகம் அருகே உள்ள வருவாய்த்துறை வரி அலுவலகம் மீது குண்டை வீசித் தாக்கியது. மேலும் தற்கொலைப் படைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அலுவலகம் பலத்த சேதத்தை சந்தித்தது. மேலும் 49 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விமானத் தாக்குதலில் 13 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. கட்டத்தின் சிதைவுகள் வீதியில் சிதறிக் கிடக்கின்றன.
உடனடியாக தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. கட்டடத்தில் பரவிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினர் அணைத்தனர்.
2வது தாக்குதல்:
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விமானப்படையினர் எனக் கூறப்படுகிறது.
அதேசமயம், புலிகளின் 2வது விமானம் கட்டுநாயகே விமானப்படை தளத்தை தாக்கியது.
விமானம் வீழ்த்தப்பட்டது-வான் புலி உடல் மீட்பு:
கட்டுநாயகே வானூர்தி நிலையப் பகுதியில் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகளின் விமானத்தை ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான கெகலிய ரம்புகவெல்லா கூறினார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் சிதைவுகள் கட்டுநாயகே பகுதியில் மீட்கப்பட்டதாகவும், ஒரு விமானியின் உடல் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியிலிருந்து இரு புலிகளின் விமானங்களும் பறந்து வந்ததாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் தங்களது விமானங்களை எரித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்த நிலையில், விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள இந்த அதிரடித் தாக்குதலால் கொழும்பில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இதன்மூலம் புலிகள் எரித்தது விமானங்களையா அல்லது அவர்கள் தயார் செய்து வந்த புதிய விமானத்தின் பாகங்களையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் புலிகளிடம் 2 விமானங்களுக்கும் அதிகமான விமானங்கள் இருக்கலாம் என்றும் தெரிகிறது.